கவுந்தப்பாடியில் லாரி மோதி 2 பேர் பலி

கவுந்தப்பாடியில் லாரி மோதி 2 பேர் பலியாகினா்.

Update: 2023-07-04 00:00 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடியில் லாரி மோதி 2 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் லாரி சக்கரத்தில் சிக்கி 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டன.

தனியார் நிறுவன ஊழியர்

ஈரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருடைய நண்பர் ஈரோடு காசிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்த தமிழ்செல்வன் (55). எலக்ட்ரீசியன்.

கவுந்தப்பாடி அருகே உள்ள செம்பூத்தாம்பாளையத்தில் சக்திவேல் விவசாய தோட்டம் வாங்கியிருந்தார். அதை பார்ப்பதற்காக நேற்று சக்திவேலும், தமிழ்செல்வனும் மோட்டார்சைக்கிளில் சென்றனர். தோட்டத்தை பார்த்த பின்னர் இருவரும் ஈரோட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார்சைக்கிளை சக்திவேல் ஓட்டினார். தமிழ்செல்வன் பின்னால் உட்கார்ந்து வந்தார்.

உடல்கள் நசுங்கின

செம்பூத்தாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே ஈரோட்டில் இருந்து கவுந்தப்பாடி நோக்கி கான்கிரீட் கலவை எந்திர லாரி வந்துகொண்டு இருந்தது. அப்போது கண்இமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட சக்திவேலும், தமிழ்செல்வனும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விபத்து நடந்த உடன் லாரி நிற்கவில்லை. சுமார் 50 மீட்டர் தூரம் சென்ற பின்னர்தான் நின்றது. இரு உடல்களும் அதுவரை இழுத்து செல்லப்பட்டன.

டிரைவர் கைது

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் திவ்யநாதன் (40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேர் பலியான அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்