2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Update: 2022-07-07 17:15 GMT

திருப்பூர்,

திருப்பூரில் நண்பரை கொலை செய்த வழக்கில் ஈடுபட்ட 2 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கு

திருப்பூர் சந்திராபுரத்திலிருந்து செரங்காடு செல்லும் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகே கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி சுரேஷ்குமார் என்பவரை முன் விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட சுரேஷ்குமாரின் நண்பர்களான திருப்பூர் பலவஞ்சிபாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த இதயக்கனி (வயது 28), மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு பிள்ளை பெட்டியை சேர்ந்த அறிவு (26), ஈரோடு மாவட்டம் வ.உ.சி. நகரை சேர்ந்த பிரவீன் குமார் (23), திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவை சேர்ந்த குணா (23) ஆகிய 5 பேரை நல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதயக்கனி மீது ஏற்கனவே பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, நல்லூர் போலீஸ் நிலையத்தில் 2 கொலை மிரட்டல் வழக்கு, அவினாசி, சேவூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு திருட்டு வழக்கும் என மொத்தம் 6 வழக்குகள் உள்ளன. அறிவு மீது நல்லூர் போலீஸ் நிலையத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த ஒரு வழக்கு உள்ளது.

2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி. பாபு உத்தரவிட்டார்.

கோவை மத்திய சிறையில் உள்ள இதயக்கனி, அறிவு ஆகியோரிடம் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகரத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 50 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்