சாமியாரை அடித்துக்கொன்ற இரும்புக்கடை ஊழியர்கள் 2 பேர் கைது

மடத்துக்குளம் பகுதியில் ஒன்றாக அமர்ந்து குடிபோதையில் சாமியாரை அடித்துக் கொலை செய்த இரும்புக்கடை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-06 16:06 GMT

போடிப்பட்டி

மடத்துக்குளம் பகுதியில் ஒன்றாக அமர்ந்து குடிபோதையில் சாமியாரை அடித்துக் கொலை செய்த இரும்புக்கடை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). சாமியாரான இவர் கழுத்தில் ருத்ராட்ச கொட்ைட, நெற்றியில் சந்தனம் குங்குமமிட்டு வீடுவீடாக சென்று யாசகம் பெற்று மடத்துக்குளம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கொலை செய்யப்பட்டு உடலை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து சுற்றி மடத்துக்குளத்தையடுத்த கருப்புசாமிபுதூர் பகுதியில் அமராவதி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் போட்டு, அதன் மீது குப்பையை பரப்பி விட்டு கொலையாளிகள் சென்று விட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் மடத்துக்குளம் போலீசார் விரைந்து வந்து மதியழகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மதியழகன், தடி, கம்பி மற்றும் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த கொலை தொடர்பாக மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த துரைப்பாண்டி என்பவரது மகன் பட்டுப்பாண்டி ( 42), இவருடைய நண்பர் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் ஸ்ரீ முருகன் (30) ஆகியோரை கைது செய்தனர்.

கைதான இருவரிடமும் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-

வாக்குமூலம்

மதியழகன், பட்டுப்பாண்டி, ஸ்ரீ முருகன் ஆகிய மூவரும் சென்னையில் உள்ள ஒரு இரும்புக்கடையில் ஒன்றாக வேலை செய்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. அதன்பின்னர் 3 பேரும் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்திற்கு வந்தனர். அங்கு உள்ள இரும்புக்கடையில் பட்டுப்பாண்டி, ஸ்ரீமுருகன் வேலை செய்து வருகிறார்கள். மதியழகன் மட்டும் சாமியார் போன்று சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்கள் 3 பேரும் தினமும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். சம்பவத்தன்று மது அருந்திய போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.அதில் அருகிலிருந்த இரும்புக்கம்பியால் மதியழகனை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். உடனடியாக அவரது உடலை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வாய்க்காலுக்கு கீழே மறைத்து வைத்து இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் கைதான இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்