"ஓரின சேர்க்கைக்கு பணம் கொடுக்காததால் கொன்றோம்"

“ஓரின சேர்க்கைக்கு பணம் கொடுக்காததால் கொன்றோம்”

Update: 2022-12-05 16:25 GMT

அனுப்பர்பாளையம்

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பின்பு பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் பனியன் நிறுவன சூப்பர்வைசரை கொலை செய்தோம் என்று கைதான 2 பேர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறதாவது:-

2 பேர் கைது

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி துரைசாமிநகரை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (வயது 39). பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் கடந்த 3-ந் தேதி 15 வேலம்பாளையத்தை அடுத்த எடிசன்நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மர்ம ஆசாமிகள் அவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக 15வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை தொடர்பாக மதுரையை சேர்ந்த விக்னேஷ் என்கிற மருதுபாண்டி (23), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பரணிதரன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

ஓரின சேர்க்கை

இதில் கைதான விக்னேஷ் என்ற மருதுபாண்டி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நானும், எனது நண்பர் பரணிதரனும் திருமுருகன்பூண்டி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தோம். அப்போது ஆபாச செயலி மூலம் கோபி கிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று எடிசன்நகர் காட்டுப்பகுதிக்கு கோபி கிருஷ்ணனை வரவழைத்தோம். அங்கு வந்ததும் மது குடித்து விட்டு எங்களிடம் தனித்தனியாக கோபி கிருஷ்ணன் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டார்.

பின்னர் அவரிடம் ரூ.17 ஆயிரம் பணம் தருமாறும் கேட்டோம். அதை கூகுல் பே மூலமாக அனுப்புமாறும் கூறினோம். பணத்தை அனுப்புவது போல் அனுப்பிய கோபி கிருஷ்ணன் கூகுல் பேக்கான ரகசிய எண்ணை தவறாக போட்டுள்ளார். 3 முறை தவறாக போட்டதால் அவருடைய கூகுல் பே கணக்கு பூட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து மது பாட்டிலால் கோபி கிருஷ்ணன் தலையில் அடித்தோம்.. இதில் அவருக்கு ரத்தம் கொட்டி உள்ளது. அதோடு நிறுத்தி விடாமல் 2 பேரும் சேர்ந்து கத்தியால் அவருடைய கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றோம். இதில் அவர் இறந்து விட்டார்.

இந்த நிலையில் போலீசார் எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு மருதுபாண்டி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே வழக்கு இருப்பதாகவும், விக்னேஷ் மருதுபாண்டியுடன் கோபி கிருஷ்ணன் ஏற்கனவே பலமுறை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். திருப்பூரில் பனியன் நிறுவன சூப்பர்வைசருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு, பணம் கொடுக்காத ஆத்திரத்தில் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்