செஞ்சி அருகே விவசாயியை தாக்கிய 2 பேருக்கு 3 ஆண்டு சிறை செஞ்சி கோர்ட்டு தீர்ப்பு
செஞ்சி அருகே விவசாயியை தாக்கிய 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து செஞ்சி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
செஞ்சி,
செஞ்சியை அடுத்த ஊரணித்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சுந்தரவடிவேல்(வயது 48), விவசாயி. இவருடைய அண்ணன், அதே ஊரை சோ்ந்த அருணகிரி(43), பாலச்சந்திரன்(53) ஆகியோரிடம் கடன் வாங்கி உள்ளார். இதுதொடர்பாக இவர்களுக்கும், சுந்தரவடிவேலுக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 11-11-2013 அருணகிரியும், பாலச்சந்திரனும் சேர்ந்து சுந்தரவடிவேலை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் சுந்தரவடிவேலுக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் அருணகிரி, பாலச்சந்திரன் ஆகியோர் மீது செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி மனோகரன் தீர்ப்பு கூறினார். அதில், அருணகிரி, பாலச்சந்திரனுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு வக்கீலாக சக்திவேல் ஆஜரானார்.