புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார் மோதி 2 பேர் காயம்

சின்னசேலம் அருகே புகையிலை பொருட்கள் கடத்தி வந்த கார் மோதியதில் 2 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-07-12 18:45 GMT

சின்னசேலம், 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த கோலோத்துகோம்பை கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கதுரை (வயது 23), வேலாயுதம். இவர்கள் இருவரும் சின்னசேலம் அருகே குரால் எக்ஸ் ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தங்கதுரை, வேலாயுதம் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த தகவலின் பேரில் கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 68 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து கார் டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ராஜஸ்தான் மாநிலம் படால் ஜலோ என்ற ஊரை சேர்ந்த அஜாரம் (35)என்பதும், தற்போது சின்னசேலம் மூங்கில்பாடி சாலை சின்னகடை வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. மேலும் விற்பனைக்காக புகையிலை பொருட்களை அவர் காரில் கடத்தி வந்தபோது விபத்தில் சிக்கியதும் தெரிந்தது. இதையடுத்து அஜாரத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்