நாகூர்:
நாகை மாவட்டத்தில் சாராய விற்பனை மற்றும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி 2 மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த 2 பேரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். பின்னர் விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர் மேல திருப்பந்துருத்தி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராதா மகன் அரவிந்த் ராதா (வயது 24) என்பதும், நாகூர் வண்ணான்குளம் மேல்கரை அமிர்தா நகரை சேர்ந்த சித்திரவேல் மகன் அசோக்குமார் (33) என்பதும், அவர்கள் இருவரும் சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் அரவிந்த்ராதா மற்றும் அசோக்குமாரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 220 விட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.