பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் ஏரிக்கரை கடைக்கால் சாராயத்தை பாக்கெட் போட்டு மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தொண்டபாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் (வயது 46), பிரசாந்த் (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த 12½ லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தாா்.