வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது
பேரளம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் மற்றும் ஸ்கூட்டரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:
பேரளம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் மற்றும் ஸ்கூட்டரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெளிநாடு சென்றார்
பேரளம் அருகே அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நீலாவதி (வயது 48). இவருடைய கணவர் தனபால். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் 2 பேரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். கணவர் தனபால் இறந்து விட்டதால் நீலாவதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நீலாவதியின் மகன்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இங்கு வந்து தங்களது தாயை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். இதனால் நீலாவதியின் வீடு பூட்டி கிடந்துள்ளது.
நகை-பணம் திருட்டு
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீலாவதியின் வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெளியூரில் உள்ள அவரது மருமகள் ஷாலினிக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே அவர் இங்கு வந்த பார்த்தபோது வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த ரூ.20 ஆயிரம், 5 கிராம் தங்க நகை மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஷாலினி பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரைணயில், அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(58) மற்றும் விஜயபாஸ்கரன்(28) ஆகியோர் நீலாவதியின் வீட்டில் திருடியதும், திருடிய ரூ.20 ஆயிரத்தை அவர்கள் செலவு செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.