ஆடுகளை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது

ஆடுகளை திருடிய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-02 18:46 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(வயது 44). இவர் ஜெயங்கொண்டம் அரசு பஸ் டெப்போ எதிரே வசித்து வருகிறார். இவர் வீட்டுக்கு அருகே கொட்டகை அமைத்து அதில் சுமார் 10 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் வயல்வெளி பகுதியில் மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகளில் 2 ஆடுகள் காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சேகர் பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து சேகர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட மேலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி(30), இலையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்கிற சுரேஷ்(27) ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், அவர்கள் ஆட்டை திருடியதாக ஒப்புக்கொண்டதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 ஆடுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் சுரேஷ் ஜெயங்கொண்டம் கிளை சிறையிலும், தனலட்சுமி திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்