பெண் உள்பட 2 பேர் தற்கொலை

காட்டுமன்னார்கோவில் அருகே தனித்தனி சம்பவத்தில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-10-05 19:42 GMT

காட்டுமன்னார்கோவில், 

விஷம் குடித்தார்

காட்டுமன்னார்கோவில் அருகே ஓமாம்புலியூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் தீபன்குமார் (வயது 27). இவர் ஐ.டி.ஐ. வரை படித்து விட்டு தனது தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜை என்பதால் வீட்டில் இருந்த டிராக்டரை சுத்தம் செய்து படையல் போடாமல் இ்ருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த தட்சிணாமூர்த்தி, தீபன்குமாரை திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு சென்று, அங்கிருந்த விஷத்தை குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். சற்று நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சாவு

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் தீபன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தட்சிணாமூர்த்தி காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய விவரம் வருமாறு:-

சண்டை

காட்டுமன்னார்கோவில் ஞானவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (30). கம்பி பிட்டர். இவருக்கும் மயிலாடுதுறை மாவட்டம் புளியந்துறையை சேர்ந்த பிரவீனா (26) என்பவருக்கும் கடந்த 1¾ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது.

பரசுராமன் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பரசுராமனின் பெற்றோர் பிரவீனாவிடம் பரசுராமன் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு தவணை கட்ட பணம் கேட்டு சண்டை போட்டுள்ளனர்.

தற்கொலை

இதனால் மனமுடைந்த பிரவீனா வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பற்றி பிரவீனாவின் தாய் ஆதிலட்சுமி காட்டுமன்னார்கோவில் போலீசில், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரவீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவருக்கு திருமணமாகி 1¾ ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்று சிதம்பரம் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்