வியாபாரி கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது
ஆலங்குளம் அருகே வியாபாரி கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வட்டாலூரை சேர்ந்தவர் முத்து ராமலிங்க ராஜன் (வயது 45). பழைய இரும்பு வியாபாரி. இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, உஷா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 8-ந்தேதி இரவு முத்துராமலிங்க ராஜன் தனது தாயாரிடம் கோயம்புத்தூர் செல்வதாக கூறி சென்று உள்ளார். மறுநாள் காலை அவர் பூலாங்குளம் செல்லும் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த கடல்மணி என்பவருக்கும், இறந்த முத்து ராமலிங்க ராஜனின் மனைவி உஷாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து முத்துராமலிங்க ராஜன் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கடல்மணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த கடல்மணி, முத்து ராமலிங்கராஜனை மது அருந்த அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.
மேலும் இந்த ெகாலையில் முத்து ராமலிங்கராஜனின் மனைவி உஷாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உஷாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கடல்மணி மற்றும் அவரது நண்பர் மார்த்தாண்டத்தை சேர்ந்த ராபின் (45) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.