ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் உள்பட 2 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேரை அரியானாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேரை அரியானாவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை நகரில் 2 எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையங்களிலும், போளூரில் ஒரு எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையத்திலும், கலசபாக்கத்தில் ஒன் இண்டியா வங்கியின் ஏ.டி.எம். மையத்திலும் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் மேற்பார்வையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையிலான போலீசார் 9 தனிப்படைகளாக அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், இதில் 6 பேருக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் போலீசாருக்கு கிடைத்த அறிவியல் ரீதியான தடயங்கள் மற்றும் இதுபோன்று பிற மாநிலங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களை ஒப்பிட்டு போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த கொள்ளை சம்பவத்தில் அரியானாவை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
தனிப்படையினர் விசாரணை
அதுமட்டுமின்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் (கே.ஜி.எப்.) பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து திருவண்ணாமலைக்கு வந்து கண்காணித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டு உள்ளதும் தெரியவந்தது.
மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் காரில் திருவண்ணாமலையில் கிராமப்புற பகுதியாக கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்று உள்ளனர்.
இதையடுத்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானாவிற்கும், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையிலான தனிப்படையினர் குஜராத்திற்கும்,
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் கர்நாடகாவிற்கும், திருவள்ளுர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ்கல்யாண் தலைமையிலான தனிப்படையினர் ஆந்திர மாநிலத்திற்கும் சென்றனர்.
மேலும் ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி தடய அறிவியல் சம்பந்தப்பட்ட புலன் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.
அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் கோலார் பகுதியில் 2 பேரையும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்ற 6 பேரை குஜராத்திலும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை கும்பல் தலைவன்
மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கர்நாடகாவில் போலீஸ் நெருங்கியதை அறிந்து கோலார் பகுதியில் இருந்து பெங்களூரு வந்து அங்கிருந்து விமானத்தின் மூலம் அரியானாவிற்கு தப்பி சென்றனர்.
இதையடுத்து தீரன் சினிமா பட பாணியில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் அரியானா மாநில போலீசார் உதவியுடன் அரியானா மாநிலத்தில் மேவாட் பகுதியில் இருந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் தலைவன் அரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் (வயது 35) மற்றும் அரியானா மாநிலம் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆஜாத் (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் அழைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து திருவண்ணாமலைக்கு தனிப்படை போலீசார் வந்து கொண்டிருக்கின்றனர்.