ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் குத்திக் கொலை

வாலாஜா அருகே ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.

Update: 2023-01-01 17:46 GMT

கத்தியால் குத்திய மர்ம நபர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 35). சரக்கு ஆட்டோ டிரைவர். மோட்டார்சைக்கிள் மெக்கானிக்காவும் வேலை செய்தார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

வி.சி.மோட்டூர் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (35) லாரிகளில் வயரிங் சம்பந்தமான வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

குழந்தைவேல் மற்றும் சரவணன் நேற்று மாலை புத்தாண்டை முன்னிட்டு வி.சி.மோடூரில் உள்ள லாரி பழுது பார்க்கும் நிலையத்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மர்ம நபர் ஒருவர் குழந்தைவேலுவை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனை தடுக்க சென்ற சரவணனையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து மர்ம நபர் தப்பி சென்றுவிட்டார்.

2 பேர் பலி

இதில் படுகாயமடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தைவேலு வரும் வழியிலேயே இறந்துவிட்டது தெரிய வந்தது. சரவணனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ராணிப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு, வாலாஜா இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கொலை செய்த மர்ம நபர் யார், முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருவரிடம் விசாரணை

மேலும் லாரி ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரியின் முன்பக்க கண்ணாடி உடைக்கபட்டு இருந்தது. அந்த லாரியை வாலாஜா போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர். இது தொடர்பாக அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தில் ஒரே ஊரை சேர்ந்த இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்