சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் பலி
திண்டிவனத்தில் இரவு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிய வழியில் லாரி மோதி ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்
திண்டிவனம்
சப்-இன்ஸ்பெக்டர் மகன்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ரோஷணை, வாஜ்பாய் நகரை சேர்ந்தவர் கணேசன். ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவரது மகன் புவனேஸ்வர்(வயது 23). திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சையது இப்ராஹிம் மகன் சையத் முபாரக்(22).
நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் திண்டிவனம்-புதுச்சேரி சாலை இறையானூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள இரவு உணவகத்துக்கு சென்று சாப்பிட்டு விட்டு மீண்டும் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை புவனேஸ்வர் ஓட்ட சையத் முபாரக் பின்னால் அமர்ந்திருந்தார்.
டிப்பர் லாரி மோதியது
மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது பிரம்மதேசம் பகுதியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் நோக்கி வந்த டிப்பர் லாரி புவனேஸ்வர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சையத் முபாரக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிப்பர் லாரி மோதி நண்பர்கள் இருவர் பலியான சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.