பீகார் வாலிபர் உள்பட 2 பேர் கைது
பழனியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற பீகார் வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி திருநகரை சேர்ந்த நாராயணமூர்த்தி மனைவி முத்துக்குமாரி (வயது 31). நேற்று முன்தினம் இவர், திருநகர் பஸ்நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து அவரிடம் நகை பறிக்க முயன்றனர். அப்போது முத்துக்குமாரி கூச்சல் போடவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பழனி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவை குனியமுத்தூரை சேர்ந்த நிசாருதீன் (29), பீகார் மாநிலம் கோர்மா பகுதியை சேர்ந்த சூரஜ்குமார் (25) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும், கோவை பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் மீது கோவை போலீஸ்நிலையத்தில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.