பெண் உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு வெவ்வேறு பிரச்சினை காரணமாக பெண் உள்பட 2 பேர் தனித்தனியாக தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-12 18:23 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு வெவ்வேறு பிரச்சினை காரணமாக பெண் உள்பட 2 பேர் தனித்தனியாக தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

செங்கம் தாலுகா பெரியகாயம்பட்டு பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி இந்திராணி (வயது 40) என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அவர் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் போலீசாரின் விசாரணையில், இவர் குடும்பத்துடன் வசித்து வரும் இடத்தின் ஆவணங்களை வருவாய்த்துறையின் ஆன்லைனில் தவறாக பதிவு செய்து உள்ளனர்.

தவறான பதிவேற்றத்தை திருத்தி தரக்கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

நிலம், வீடு ஆக்கிரமிப்பு

அதேபோல் கலசபாக்கம் தாலுகா சின்னக்காலூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (70) என்பவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் அவரது மனைவி உயிரிழந்து விட்டார். இவருக்கு 3 ஏக்கர் நிலம் மற்றும் வீடு உள்ளது.

அவரது மகன் நிலத்தையும், வீட்டையும் ஆக்கிரமித்து கொண்டு அவரது அடித்து வீட்டில் இருந்து வெளியே துரத்தியதாகவும், இது குறித்து கலசபாக்கம் போலீசில் புகார் செய்தால் போலீசாரும் தன்னை மிரட்டுவதாகவும், இதனால் தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து தீக்குளிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் மேல்விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்