சொகுசு காரில் கஞ்சா கடத்திய வழக்கில் திருப்பூர் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் கைது

ஊட்டியில் இருந்து கோவைக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்திய வழக்கில் திருப்பூர் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா, ரூ.2½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-10 16:54 GMT


ஊட்டியில் இருந்து கோவைக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்திய வழக்கில் திருப்பூர் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா, ரூ.2½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

கோவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சொகுசு கார் ஒன்றில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக கோவை சாய்பாபா காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தமிழரசு உத்தரவின் படி சப்-இன்ஸ்பெக்டர் செங்கோள்நாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த டெல்லி பதிவு எண் கொண்ட சொகுசுகாரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் அந்த காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் ஏராளமான பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. போலீசார் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரில் இருந்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வியாபாரி கைது

மேலும் காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த ஜவுளி வியாபாரி வீரசிவக்குமார் (வயது 55), ஊட்டியை சேர்ந்த கார்த்திக் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம், கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கோவையில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக ஊட்டியில் இருந்து சொகுசு காரில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வங்கி கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்