வாலிபர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2023-04-14 19:00 GMT

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 32). இவர், சொந்தமாக சரக்கு வேன் வைத்து, அதனை ஓட்டி தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் சுப்பிரமணி தனது மோட்டார் சைக்கிளில் சத்திரப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். பழனி-திண்டுக்கல் சாலையில் சத்திரப்பட்டி அருகே அவர் வந்தபோது, அங்கு சுங்கச்சாவடி அமைப்பதற்காக சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில், படுகாயம் அடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் செம்பட்டியை அடுத்த சமத்துவபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (39). இவர், தனது நண்பரான எஸ்.கோடங்கிபட்டியை சேர்ந்த ஆனந்த் (35) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் புதுகோடாங்கிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆனந்த் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். திண்டுக்கல்-செம்பட்டி சாலையில், புதுகோடாங்கிபட்டி அருகே அவர்கள் வந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட செந்தில்குமாரும், ஆனந்தும் படுகாயம் அடைந்தனர். இதில், ஆனந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். செந்தில்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்