வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே தனித்தனி சம்பவத்தில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே டி.கொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சந்தோஷ் என்கிற சூர்யா (வயது 23). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி அலைந்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் இருந்த மரத்தில் சூர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
திருக்கோவிலூர் அருகே தானம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் மனைவி வள்ளியம்மாள் (39) சம்பவத்தன்று வள்ளியம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் தீ உடல் முழுவதும் பரவி எரிந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் பலனின்றி வள்ளியம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து வள்ளியம்மாள் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.