கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தியாகதுருகம்
என்ஜினீயரிங் மாணவர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கவுதம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் மகன் பிரதீஷ்(வயது 20). சேலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.தியாகதுருகம் பெரியமாம்பட்டு அருகே வந்த போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து பிரதீஷ் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது வளர்ப்பு தந்தை மேகநாதன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலாளி பலி
அதேபோல் திருக்கோவிலூர் அருகே உள்ள சடக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் பவுன்குமார்(32). திருக்கோவிலூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த இவர் நேற்று முன்தினம் எரவலத்தில் இருந்து மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பவுன்குமார் ஓட்டி வந்த மொபட்மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுன்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான மோட்டர் சைக்கிளை ஓட்டி வந்த கச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கேசவன் மகன் ஆனந்தராஜ்(29) என்பவர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.