காட்டுப்பன்றி இறைச்சியை வீட்டில் சமைக்க முயன்ற 2 பேருக்கு அபராதம்
திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி இறைச்சியை வீட்டில் சமைக்க முயன்ற 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் நா.ஸ்ரீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் கண்ணமடைகாப்பு காட்டில் நேற்று இரவு ரோந்து பணி ஈடுபட்டனர்.
அப்போது வனத்துறையினருக்கு திருவண்ணாமலை அருகே உள்ள தென்மாத்தூர் கிராமத்தில் காட்டுப்பன்றி இறைச்சி சமைப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராஜா (வயது 38) காட்டுப்பன்றி இறைச்சியை வாங்கி வந்து வீட்டில் சமைக்க முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்.
இவரது வீட்டில் சோதனை செய்ததில் சுமார் 3 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் ராஜாவையும், அவருக்கு உடந்தையாக இருந்த அருள் (38) என்பவரையும் வனத்துறையினர் திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து காட்டுப்பன்றியை வாங்கி சமைக்க முயன்ற இருவருக்கும் ரூ.40 ஆயிரம் வனத்துறையினர் விதித்தனர்.
மேலும் காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்த நபரை தேடி வருகின்றனர்.