மெக்கானிக் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் மெக்கானிக் உள்பட 2 பேர் பலியானார்கள்.
வெவ்வேறு விபத்துகளில் மெக்கானிக் உள்பட 2 பேர் பலியானார்கள்.
மெக்கானிக்
திருச்சியை அடுத்த சிறுகனூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது53). டிவி மெக்கானிக். நேற்று மாலை இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் பிரதான சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவரின் மோட்டார் சைக்கிள் சாலையின் மையத் தடுப்புச் சுவரில் மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 வயது சிறுவன் பலி
லால்குடியை அடுத்த புள்ளம்பாடி அருகே உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் ஜோயல் (10). நேற்று மாலையில் ஜோயலை அவரது பெரியம்மா பிரிதிக் மாலா மொபட்டில் அழைத்துக்கொண்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அவர்களுடன் பிரிதிக் மாலாவின் மகள் மகிஷா உடன் இருந்தார். இந்த நிலையில் இ. வெள்ளனூர் தனியார் மருத்துவமனை எதிரே வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் சிறுவன் ஜோயல் சம்பவ இடத்திேலயே இறந்தார். மகிஷா, பிரிதிக் மாலா ஆகிேயார் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.