மோட்டார் சைக்கிளில் சென்ற ஐ.டி.ஊழியர் உள்பட 2 பேர் பலி

மதுரை நத்தம் மேம்பாலத்தில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஐ.டி.ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2023-07-07 20:29 GMT

மதுரை நத்தம் மேம்பாலத்தில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஐ.டி.ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

நத்தம் பறக்கும் பாலம்

மதுரையில் இருந்து நத்தம் செல்வதற்காக தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7½ கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மிகவும் உயரமான இந்த பாலத்தில் வாலிபர்கள் அடிக்கடி மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு வருவதால் தனிப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் பாலத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு அதன் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதையும் மீறி சில வாலிபர்கள் அந்த பாலத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அவ்வாறு ஈடுபடுபவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள்.

2 பேர் சாவு

இந்த நிலையில் ஊமச்சிக்குளத்தில் இருந்து மதுரை தல்லாகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் 2 பேர் அதிவேகமாக நேற்று இரவு வந்து கொண்டிருந்தனர். அப்போது பி.டி.ஆர்.சிலைக்கு மேலே வளைவில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் அதே இடத்தில் நெஞ்சில் அடிப்பட்டு கீழே விழுந்தார். பின்னால் அமர்ந்திருந்தவர் சுமார் 20 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு கிடந்தார்.

அந்த நேரத்தில் வாகன சோதனையில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனே அங்கு சென்று பார்த்த போது இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதை கண்ட பொதுமக்கள் அங்கு கூடினர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறி போக்குவரத்தை சரிசெய்தனர். பின்னர் போலீசார் விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து தல்லாகுளம் விபத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஐ.டி.ஊழியர்

அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் பெத்தானியாபுரத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன்பாபு (வயது 23) என்பதும், பின்னால் அமர்ந்து வந்தவர் வடக்குமாசிவீதியை சேர்ந்த ஐ.டி.ஊழியர் ஆனந்தகிருஷ்ணன் (23) என்பதும் தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் அழகர்கோவில் அருகே உள்ள நண்பரின் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு குளித்து விட்டு இரவு வீடு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்