மதுரை வாலிபர் உள்பட 2 பேர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ்-வேன் மோதிய விபத்தில் மதுரை வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ்-வேன் மோதிய விபத்தில் மதுரை வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ்-வேன் மோதல்
ஊட்டியில் இருந்து செங்கோட்டை நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த சுரேஷ்குமார்(வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். அதேபோல் ராஜபாளையத்தில் கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு, கலை குழுவை சேர்ந்த 18 பேர் மதுரையை நோக்கி வேனில் சென்று கொண்டு இருந்தனர். இந்த வேனை மதுரையை சேர்ந்த ஸ்ரீதர்(31) ஓட்டினார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி அருகே லட்சுமியாபுரம் பகுதியில் அரசு பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
2 பேர் பலி
இந்த விபத்தில் வேன் டிரைவர் ஸ்ரீதர், வேனில் பயணித்த ரகு(24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் மதுரையை சேர்ந்த பாசப்பிரியன்(26), சரவணகுமார்(23), மலைச்சாமி(28), அருண்குமார்(24), நந்தகுமார்(30), கார்த்திக்(29), சந்தியா(23), வாடிப்பட்டியை சேர்ந்த கருப்பையா(18), விஸ்வநாதன்(19), சுரேஷ்குமார் (45), டிரைவர் பூதத்தான்(52) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் விருதுநகர் மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இ்டத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ரகு, ஸ்ரீதர் ஆகியோரின் உடல்கள் பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்து நடந்த இடத்தில் விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விபத்து காரணமாக மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.