வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-05-23 21:04 GMT

2 பேர் சாவு

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சூரப்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 27). பெயிண்டரான இவர் சம்பவத்தன்று துவரங்குறிச்சி அருகே உள்ள கருமலையில் பெயிண்ட் அடிக்கும் வேலையை முடித்துவிட்டு, நள்ளிரவில் சூரப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரம் பிரிவு ரோடு அருகே சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ராம்ஜிநகர் அருகே உள்ள பூலாங்குளத்துபட்டி தெற்கு தெருவை சேர்ந்த கருப்பையா(57), வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை திருச்சி காந்திமார்க்கெட்டில் வாங்கிவிட்டு, மொபட்டில் திரும்பி சென்றார். ராம்ஜிநகர் அருகே வந்தபோது அவர் நிலை தடுமாறி சாலையோரத்தில் விழுந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

*சிதம்பரம் வாலாடிக்கொல்லை அருகே உள்ள தென்பாதி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் தமிழரசி(21) சிறுகனூர் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், விடுதியில் தங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 19-ந்தேதி விடுதியில் இருந்து அவர் மாயமானார். இது குறித்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் திட்டக்குடி பகுதியில் நண்பர் வீட்டில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் தமிழரசியை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

*திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் லூதர்(56). தனியார் நிறுவன ஊழியரான இவர், ரூ.15 ஆயிரத்தை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவத்தன்று உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் உள்ள அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி மொரின் அஞ்சலா கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது விற்றவர் கைது

*மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம், சூறாவளிப்பட்டி, கும்பகுறிச்சி, குடிசைமாற்று வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே உள்ள பார்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சிறப்பு பிரிவு போலீசார் மற்றும் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில்களை விற்ற தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள அடைஞ்சூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமாரை(37) போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 25 மது பாட்டில்கள், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கிணற்றில் பிணமாக மிதந்த டிரைவர்

*தா.பேட்டை அருகே அஞ்சலம் கிராமத்தை சேர்ந்த பரமசிவத்தின் மகன் வடிவேல்(31). லாரி டிரைவரான இவர் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் அஞ்சலம் அருகே சின்னமேலூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதந்தார். அவரது உடலை முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டனர். இதையடுத்து தா.பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு சென்று வடிவேலின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*காட்டுப்புத்தூரை அடுத்த ஆனைக்கல் பட்டியைச் சேர்ந்தவர் ஜோதிவேல்(55). விவசாய கூலி தொழிலாளியான இவர் மது அருந்திவிட்டு பால தடுப்புச்சுவற்றில் அமர்ந்திருந்தபோது, தவறி விழுந்ததில் பின் தலையில் அடிபட்டது. இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பிணமாக கிடந்த முதியவர்

*திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள அகிலாண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் ராஜகோபாலன்(80). ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம், பக்கத்தினர் கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு மர்மமான முறையில் ராஜகோபாலன் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜகோபாலன் உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்