வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.
ராஜபாளையம்,
மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.
முதியவர் பலி
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 69). இவரது மகன் நந்தகோபால் (49). சென்னையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ராமசாமியின் வீட்டில் கட்டுமான பணி நடப்பதால் நந்தகோபால் தற்சமயம் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் கொத்தனாருக்கு டீ வாங்குவதற்காக சமுசிகாபுரம் பகுதிக்கு சைக்கிளில் ராமசாமி சென்றார். அப்போது சத்திரப்பட்டியில் இருந்து ராஜபாளையத்திற்கு வந்த அரசு பஸ் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ராமசாமி பலியானார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வத்திராயிருப்பு மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கோபால் (38) என்பவரை கைது செய்தனர்.
மற்றொரு விபத்து
விருதுநகர் அருகே உள்ள கே. உசிலம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (51). ஓட்டல் தொழிலாளியான இவர் இந்நகர் என்.ஜி.ஓ. காலனி அருகே நான்கு வழிச் சாலையை கடந்த போது மதுரையில் இருந்து தெற்கு நோக்கி சென்ற வாகனம் மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். மோதிய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.
இதுகுறித்து அவரது மனைவி ஆதிதேவி (50) கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.