வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.;
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதூர்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் அஜித்குமார்(22). இவர் நேற்று முன்தினம் வெற்றியூரில் உள்ள அவரது நண்பரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்று விட்டு, ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். திருமானூரில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதியது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்து சென்றவர்
ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 56). இவர் தனது மனைவி விசாலாட்சியுடன் காட்டுமன்னார்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். மீன்சுருட்டி அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுண்டிபள்ளம் மயானம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே திடீரென நடந்து வந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். அவரிடம் 4 மதுபாட்டில்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் படுகாயமடைந்த அன்பழகன் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் மெயின் ரோடு தெருவை சேர்ந்த மணி(55) என்பது தெரியவந்தது. இதையெடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.