மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

கும்பகோணம், திருவையாறில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-07-03 20:28 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி(வயது44). இவரது வீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தின் கிளைகள் அருகில் உள்ள உயர் அழுத்த மின் கம்பியில் உரசிய நிலையில் இருந்தது. இதனால் சின்னத்தம்பி முருங்கை மரத்தில் ஏறி கிளைகளை வெட்டினார். அப்போது முருங்கை மரத்தின் வெட்டப்பட்ட கிளைகள் உயர் மின்அழுத்த கம்பியில் விழுந்தது. இதனால் மரக்கிளை வழியாக சின்னத்தம்பி மீது மின்சாரம் பாய்ந்து அவர் மரத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் மரத்தில் தொங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர்.

பின்னர் மரத்தில் தொங்கிய சின்னத்தம்பியின் உடலை கீழே இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சின்னத்தம்பி உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவையாறு

திருவையாறு அருகே உள்ள உமையவள் ஆற்காடு காலனி தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (75). இவருடைய மனைவி கண்ணம்மாள்(60). இவர்கள் இருவரும் திருப்பூந்துருத்தியை சேர்ந்த ஒருவர் தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தனர். நேற்று காலை பொன்னுசாமி தோப்பில் சாய்ந்து இருந்த கம்பி வேலியை நிமிர்த்தி கட்ட முயன்றார். அப்போது கம்பி வேலி மீது மின்கம்பி அறுந்து கிடந்தது. இதை அறியாத பொன்னுசாமி கம்பிவேலியை தொட்டாா். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொன்னுசாமி உடலை கைப்பற்றி திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்