தியாகதுருகம் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் சாவு

தியாகதுருகம் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-06-04 18:45 GMT

தியாகதுருகம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சாத்தப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 58). முடி திருத்தும் தொழிலாளி. இவர் நேற்று சொந்த வேலைகாரணமாக தியாகதுருகம் சென்றுவிட்டு, அங்கிருந்து மொபட்டில் சாத்தப்புத்தூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பீளமேடு பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருகம் நோக்கி கார் ஒன்று வந்தது. இந்நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், கணபதி வந்த மொபட் மீது மோதியது.

அதோடு நிற்காமல், அங்கு சாலையோரம் உள்ள தனது தாய் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சின்னசேலம் காரியானூர் கிராமத்தை சேர்ந்த பிரபு மனைவி சோனியா (33) என்பவர் மீதும் மோதி, அங்கிருந்த புளிய மரத்தின் மீது மோதியபடி கார் நின்றது. உடனே கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

2 பேர் சாவு

இதற்கிடையே படுகாயமடைந்த கணபதி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். படுகாயங்களுடன் உயிருக்காக போராடிய சோனியவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சோனியா இறந்து போனார்.

விபத்து பற்றி அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கணபதி மனைவி காவேரி அளித்த புகாரின் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரை தேடி வருகின்றனர். தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்