மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மூதாட்டி தற்கொலை
கூடலூர் பூசான மாயத்தேவர் சந்துவை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது 83). இவரது 3 மகன்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் அழகம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அழகம்மாளின் காலில் காயம் ஏற்பட்டு புண்ணாக இருந்து வந்தது. இதற்காக அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அழகம்மாள், நேற்று முன்தினம் கூடலூர் புறவழிச்சாலை அருகே தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள இலவமரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
உப்புக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 33). அவருடைய மனைவி தேன்மொழி (27). இந்த தம்பதிக்கு 6 மற்றும் 4 வயதில் 2 மகன்கள் உள்ளனர். தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட தேன்மொழி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வயிற்றுவலி அதிகமானதால் மனம் உடைந்த அவர், வேட்டியால் தூக்குப்போட்டு தொங்கி ெகாண்டிருந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தேன்மொழி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில், தேன்மொழியின் தந்தை தட்சணாமூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.