அடையாறு ஆற்றில் குதித்து 2 பேர் தற்கொலை

அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 2 பேரில் ஒருவரின் உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். மற்றொருவரின் உடலை தேடி வருகின்றனர்.

Update: 2023-08-23 21:37 GMT

சென்னை,

சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் அடையாறு மேம்பாலம் மற்றும் ஆற்றுப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதையும் தாண்டி குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது.

இந்தநிலையில் நேற்று காலை அடையாறு ஆற்று பாலத்தில் ஆண் ஒருவரின் பிணம் மிதப்பதாக அடையாறு போலீசாருக்கு தகவல் வந்தது. அடையாறு போலீசார் மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் ஆற்றில் மிதந்த உடலை மீட்டனர். அவர், ஆற்றில் குதித்து தற்கொலை செய்ததும், அவர் தற்கொலை செய்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் எனவும் தெரிகிறது. இதனால் அவரது உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.

தீவிரமாக தேடும் பணி

அவர் அணிந்திருந்த சட்டை பையில் இருந்த ஆதார் அட்டையை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர், கோட்டூர்புரம் சூர்யா நகரை சேர்ந்த ஹரிசர்மா (வயது 55) என்பதும், இவர் நோயால் அவதிப்பட்டு வந்ததால் விரக்தியில் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல நேற்று முன்தினம் 27 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவரும் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் 2 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்