ராணுவ மேஜர் காருக்கு தீவைத்த ரவுடி உள்பட 2 பேர் கைது

ராணுவ மேஜர் காருக்கு தீவைத்த ரவுடி உள்பட 2 பேர் கைது

Update: 2022-10-31 18:45 GMT

கோட்டூர் அருகே ராணுவ மேஜர் காருக்கு தீவைத்த ரவுடி உள்பட 2 பேரை போலீசார் ைகது செய்தனர்.

ராணுவ மேஜர் காருக்கு தீவைப்பு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நடுவக்களப்பால் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருமுருகன்(வயது 49). இவர், ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து இருந்தார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேந்திரன் குடும்பத்துக்கும், திருமுருகன் குடும்பத்துக்கும் முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருமுருகன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் மகன் ராகுல்(24), திருமுருகன் வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த காரை அடித்து உடைத்ததுடன் தீவைத்து கொளுத்தினார். இதில் கார் சேதம் அடைந்தது.

ரவுடி உள்பட 2 பேர் கைது

இதுகுறித்து களப்பால் போலீஸ் நிலையத்தில் திருமுருகன் புகார் கொடு்த்தார். அதன்பேரில் ராகுல், ராஜேந்திரன்(52), அவரது மனைவி பிரேமா(45), இவர்களது மகள் பிருந்தா(22), உறவினர் சதீஷ்குமார்(25) ஆகிய 5 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூர்ண சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ராகுல், சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ராகுல் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் ராகுல் பெயர் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ராணுவ மேஜர் காரை தீவைத்து கொளுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்