தூத்துக்குடியில் பெண்ணை கடத்தி கற்பழித்த ரவுடி உள்பட 2 பேர் கைது
தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணை மோட்டார்சைக்கிளில் கடத்தி கற்பழித்த ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணை மோட்டார்சைக்கிளில் கடத்தி கற்பழித்த ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண் கடத்தல்
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் முருகன் என்ற கட்டை முருகன் (வயது 27). இவர் மீது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் மொத்தம் 18 வழக்குகள் உள்ளன.
பிரபல ரவுடியான இவரும், அழகேசபுரத்தை சேர்ந்த கந்தையா மகன் கோகுல்ராம் (19) என்பவரும் மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் நடந்து சென்ற 40 வயது பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றனர்.
கற்பழிப்பு
பின்னர் அந்த பெண்ணை தருவைகுளம் கல்மேட்டில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். அங்கு அந்த பெண்ணை முருகன் என்ற கட்டை முருகன் கற்பழித்தாராம். மறுநாள் அந்த பெண்ணை அவரது வீட்டின் அருகே உள்ள சந்திப்பில் இறக்கி விட்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து கோகுல்ராமும், அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தன்னுடன் வருமாறு அழைத்து உள்ளார். ஆனால் அந்த பெண் மறுத்து விட்டதால், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தனிப்படை
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இதற்கிடையே தாளமுத்துநகர் பகுதியில் சென்று கொண்டு இருந்த ஒருவரை, முருகன் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வனிதா, மணிமாறன் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
2 பேர் கைது
இந்தநிலையில் தனிப்படை போலீசார், முருகன் என்ற கட்டை முருகன், கோகுல்ராம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் சென்றபோது முருகன் தவறி விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.