இரட்டைக் கொலை வழக்கில் 2 பேர் கைது

இரட்டைக் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-07 21:02 GMT

துறையூர்:

இரட்டைக் கொலை

திருச்சி மாவட்டம் துறையூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொத்தம்பட்டி குண்டாறு பாலத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதேபோல் தா.பேட்டை அருகே ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பொன்னுசங்கம்பட்டி பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து துறையூர் மற்றும் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமாநாடு பாலத்தில் ரத்தக்கறை உறைந்த மதுபாட்டில்கள், செருப்புகள் சிதறி கிடந்தது ஒரத்தநாடு போலீசாருக்கு தெரியவந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டையை சேர்ந்த பிரபு(வயது 44) மற்றும் ஸ்டாலின்(46) ஆகியோரை மர்ம நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவின்பேரில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட துணை சூப்பிரண்டு யாஸ்மின், இன்ஸ்பெக்டர்கள் துறையூர் செந்தில்குமார், முசிறி செந்தில்குமார், தா.பேட்டை பொன்ராஜ் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் விரைந்து செயல்பட்டனர். இதில் நேற்று ஒரத்தநாட்டில், தங்களது நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்த ஒரத்தநாடு நெடுவாக்கோட்டையை சேர்ந்த குமார் மகன் ஹரிகரன்(21), சக்திவேல் மகன் சிவசூர்யா(24) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்ததாக போலீசார் கூறியதாவது:-

காரில் உடல்களுடன்...

ஹரிகரனின் உறவினரான ஒரு பெண்ணுடன் பிரபு தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதை ஹரிகரன் பலமுறை கண்டித்தும் பிரபு கேட்கவில்லை. இதனால் சம்பவத்தன்று அவர் தனது நண்பரான விஷ்வா மூலமாக, பிரபுவை தென்னமாநாடு பகுதிக்கு வரவழைத்துள்ளார். இதில் பிரபு தனது உறவினரான ஸ்டாலினை அழைத்துக் கொண்டு அங்கு வந்துள்ளார். அப்போது விஷ்வா, அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

பிரபுவுக்கும், ஸ்டாலினுக்கும் போதை அதிகமானவுடன், அப்பகுதியில் மறைந்திருந்த ஹரிகரன் மற்றும் சிவசூர்யா ஆகியோர் அங்கு வந்து கையில் வைத்திருந்த இரும்பு கம்பி போன்றவற்றால் பிரபு மற்றும் ஸ்டாலினை சரமாரியாக தலையில் தாக்கி, முகத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தனது உறவினர் ஒருவரது காரின் பின்பகுதியில், 2 பேரின் உடல்களையும் ஏற்றிக்கொண்டு கொல்லிமலைக்கு சென்று அங்கு மலையில் இருந்து 2 பேரின் உடல்களையும் கீழே வீசிவிட்டு வர முடிவு செய்தனர்.

ஜி.பி.எஸ். உதவியுடன்...

ஆனால் அங்கு செல்ல வழி தெரியாததால், செல்போனில் ஜி.பி.எஸ். உதவியுடன் காரில் ஹரிகரன், சிவசூர்யா ஆகியோர் ஒரத்தநாட்டில் இருந்து இரவில் புறப்பட்டு, அரியலூர், பெரம்பலூர் வழியாக கொல்லிமலை நோக்கி சென்றுள்ளனர். துறையூர் பகுதியில் வந்தபோது விடிந்து விட்டதால், மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் பிரபுவின் உடலை கொத்தம்பட்டி குண்டாற்று பாலத்தில் தூக்கி வீசியுள்ளனர். அப்போது லாரி போக்குவரத்து இருந்ததால், ஸ்டாலினின் உடலை காரில் கொண்டு சென்று பொன்னுசங்கம்பட்டி பகுதியில் உள்ள பாலத்தில் வீசிவிட்டு, அதே காரில் ஊருக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துனர்.

மற்றொருவருக்கு வலைவீச்சு

இதையடுத்து அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, இரும்பு கம்பிகள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் துறையூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஷ்வாவை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்