ஸ்ரீபெரும்புதூர் அருகே போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்க முயன்ற 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அடுத்த சிட்லபாக்கம் காரணி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 31). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே நிலம் வாங்க விரும்பினார். விக்னேசை சென்னை அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45) மற்றும் குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் கலைஞர் தெருவை சேர்ந்த மோகன் (55) இருவரும் சந்தித்து தங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் அருகே சொந்தமாக நிலம் உள்ளது. அதை விற்பதாக கூறி உள்ளனர். இருவரும் ஆவணங்களை கொடுத்தனர். விக்னேஷ் அதை நம்பி ரூ.3½ லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார்.
நேற்று ஸ்ரீபெரும்புதூர் பத்திர பதிவு அலுவலகத்தில் சென்று பத்திரத்தை பதிவு செய்யும் போது அது போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது குறித்து விக்னேஷ் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் வெங்கடேசன், மோகன் இருவரும் போலியாக கலர் நகல் பத்திரம் தயாரித்து நிலத்தை விற்க முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.