பன்றிகளை திருடிய 2 பேர் கைது
ஆண்டிப்பட்டி அருகே பன்றிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டியன். இவர் 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல தனது பன்றிகளை வீட்டுக்கு அருகே தொழுவில் அடைத்து வைத்திருந்தார். பின்னர் நேற்று காலையில் வந்து 8 பன்றிகள் திருடு போய் இருந்தது. இதுகுறித்து பால்பாண்டியன் ஆண்டிப்பட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பன்றி திருடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி அடுத்துள்ள டி.ராஜகோபாலன்பட்டி விலக்கு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள், டி.ராஜகோபாலன்பட்டி காலனி பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 19), தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினத்தை சேர்ந்த சரவணன் (32) என்றும், அவர்கள் பால்பாண்டியனின் 8 பன்றிகளை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 8 பன்றிகளை மீட்டனர்.