பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது
திண்டுக்கல்லில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் முருகன். அவருடைய மனைவி லட்சுமி (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், லட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் திண்டுக்கல் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த மதுரைவீரன் (22), மதுசூதனஅய்யப்பன் (25) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையை பறிமுதல் செய்யப்பட்டது.