காரை திருடி வாணியம்பாடியில் பதுக்கிய 2 பேர் கைது

வேலூரில் காரை திருடி வாணியம்பாடியில் பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-07-01 17:34 GMT

கார் திருட்டு

வேலூர் காகிதப்பட்டறை சாரதிநகரை சேர்ந்தவர் கிருபானந்தம் (வயது 48). இவர் தனது காரை கடந்த 15-ந் தேதி வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது காரை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவியை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கார் வாணியம்பாடியில் உள்ள ஒரு மெக்கானிக் ஷாப்பில் பழுதுபார்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று மெக்கானிக் ராஜேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் காரை 4 பேர் கொண்டு வந்து பழுது பார்ப்பதற்காக நிறுத்தி விட்டு சென்றதாக தெரிவித்தார். காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இதனிடையே வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே 2 பேர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கிருபானந்தம் கார் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஒடுகத்தூர், குருவராஜபாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது28), வாணியம்பாடி பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சின்னதம்பி (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஒடுகத்தூரை சேர்ந்த ராமகிருஷ்ணா, சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

கார் திருட்டு கும்பல் பல்வேறு இடங்களில் கார்களை திருடியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் அவர்களிடம் மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்