திருமண மண்டபத்தில் 4 பவுன் நகையை திருடிய 2 பேர் கைது
விழுப்புரம் அருகே திருமண மண்டபத்தில் பெண்ணின் 4 பவுன் நகையை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த காணை அருகே உள்ள வைலாமூர் காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சுகந்தி (வயது 26). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பாபு என்பவருடைய திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காணைகுப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு சென்றார்.
அங்கு திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் சுகந்தி, மீண்டும் வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது கைப்பையை பார்த்தபோது அதிலிருந்த 4 பவுன் நகைகள் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் தனது வீடு மற்றும் திருமண மண்டபத்தின் பல இடங்களில் தேடிப்பார்த்தும் நகை கிடைக்கவில்லை.
பின்னர் இதுகுறித்து சுகந்தி, காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், தான் பங்கேற்ற அதே திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த வைலாமூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி (46), நந்தகுமார் (48) ஆகிய இருவரின் மீதும் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், அவர்கள்தான் நகையை திருடியிருக்கலாம் எனவும் கூறியிருந்தார்.
அதன்பேரில் தண்டபாணி, நந்தகுமார் ஆகிய இருவரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் சுகந்தி, தன்னுடைய நகையை கழற்றி கைப்பையில் வைத்துவிட்டு குழந்தைக்கு உணவூட்ட சற்று தூரம் தள்ளிச்சென்றார். இதை நோட்டமிட்ட தண்டபாணி, நந்தகுமார் ஆகிய இருவரும், சுகந்தியின் கைப்பையில் இருந்த 4 பவுன் நகையை திருடியது தெரிந்தது.
இதையடுத்து தண்டபாணி, நந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 4 பவுன் நகையை மீட்டனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.