பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேர் கைது
வாய்மேடு அருகே பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்.
7 பவுன் சங்கிலி பறிப்பு
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி வடக்கு குத்தகை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி இளவரசி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள பயணிகள் நிழலகத்தில் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர், இளவரசியிடம் இந்த பகுதியில் டீக்கடை எங்கு உள்ளது என்று கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார், மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இளவரசியிடம் சங்கிலி பறித்து சென்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் பதிவான காட்சிகளை வைத்து திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சதீஷ்குமார் (வயது26) மற்றும் அவரது நண்பர் கீழ நம்மங்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த முத்துச்செல்வம் மகன் பிரபாகரன் (29) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் இளவரசியிடம் இருந்து 7 பவுன் சங்கிலியை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 7 பவுன் சங்கிலியை மீட்டனர்.