மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை கொள்ளையடித்த 2 பேர் கைது

திருப்பத்தூர் அருகே மூதாட்டியின் காதுகளை அறுத்து கம்மலை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். இவர்கள் ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Update: 2023-01-30 18:06 GMT

காதை அறுத்தனர்

திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளி கிராமம் அருகே உள்ள சாணிப்பட்டி கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தனபாக்கியம் (வயது 60). இவரது கணவர் சின்னப்பையன் இறந்துவிட்டதால் தனபாக்கியம் அவரது நிலத்தில் தனியாக வசித்து வந்தார். சிறிது தூரத்தில் அவரது மகன் தமிழ்ச்செல்வன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு 9 மணி அளவில் நாய் குரைத்துள்ளது. இதனால் தனபாக்கியம் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 நபர்கள் தனபாக்கியத்தை கத்திைய காட்டி மிரட்டி அவரது இரண்டு காதுகளையும், கம்மலுடன் அறுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

2 பேர் கைது

இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான செல் நம்பரை வைத்து விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கொண்ணம்பட்டி புதூர் சீனிவாசன் மகன் விஜய் (வயது 20), திருப்பத்தூர் திருமால் நகரைச் சேர்ந்த முருகன் (42) ஆகியோர் தனபாக்கியத்தின்காதை அறுத்துசென்றது தெரியவந்தது.

அதன்பேரில் அவர்களது செல்போன் எண்ணை வைத்து ஊத்தங்கரை அனுமன்தீர்த்தம் காப்பு காட்டில் மறைந்திருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கொலை வழக்கு

திருப்பத்தூரை சேர்ந்த முருகன் மற்றும் விஜய் இருவரும் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆடுகளை திருடி ஜெயிலுக்கு சென்ற போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் விஜய் ஏற்கனவே கொலை செய்து பொருட்களை திருடி சென்ற வழக்கிலும், முருகன் பல திருட்டு வழக்கிலும் சம்பந்தப்பட்டு ஜெயிலுக்கு சென்றவர்கள்.

தனபாக்கியம் தனியாக இருப்பதை பலமுறை வந்து நோட்டமிட்டு சம்பவத்தன்று காதை அறுத்து கம்மலை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு பவுன் கம்மல், மோட்டார்சைக்கிள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்