கும்மிடிப்பூண்டி: 10 ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்து ஏரியில் வீசிய கொடூரம் - போக்சோவில் 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே 10-ஆம் வகுப்பு மாணவியை கழுத்தை நெறித்து கொலை செய்து ஏரியில் வீசிய வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-25 13:29 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக முறையாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி வீட்டிலிருந்து திடீரென காணவில்லை. இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் மட்டும் தெரிவித்த நிலையில் எழுத்து பூர்வமாக புகார் எதுவும் கொடுக்காததால் போலீசார் வழக்கு ஏதுவும் பதிவு செய்யவில்லை.

இந்த நிலையில் கடந்த 23-ஆம் தேதி (ஞாயிறு), கும்மிடிப்பூண்டி அடுத்த கொள்ளானூர் அருகே உள்ள ஆராமணி ஏரியில் மாணவி பிணமாக மீட்கப்பட்டார். கடந்த 24 மணி நேரத்திற்குள் தான் மாணவி இறந்திருக்க கூடும் என கருதிய போலீசார், உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், போலீசார் விசாரணையில், அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

போலீசாரின் விசாரணையில் முக்கரம்பாக்கத்தை சேர்ந்த வாலிபர் பிரவீன் (19 வயது) என்பவர் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரவீன் மாணவியை கடந்த 22-ம் தேதி இரவு ஆராமணி ஏரியையொட்டிய காட்டு பகுதிக்கு அழைத்து சென்று உள்ளார். உடன் பிரவீனின் உறவினரும், நண்பருமான 17 வயது சிறுவனும் சென்று உள்ளார்.

அங்கு மாணவியை கட்டாயப்படுத்தி பிரவீன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி கூறியுள்ளார். இதற்கு பிரவீன் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்கிறாய் உனது நடத்தையே எனக்கு பிடிக்கவில்லை. எனவே திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி போலீசில் புகார் தெரிவிக்கபோவதாக கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அங்கிருந்த கட்டையால் மாணவியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து தனது பைக்கில் கட்டப்பட்டிருந்த கயிற்றை கொண்டு 17 வயது சிறுவனுடன் சேர்ந்து மாணவியின் கழுத்தை இறுக்கி நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் பைக்கில் மாணவியின் உடலை கொண்டு சென்று அருகே 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஆராமணி ஏரியில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட்டு வாலிபர் பிரவீனை பாதிரிவேடு போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்தபள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

Tags:    

மேலும் செய்திகள்