சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி சுருட்டல் 2 பேர் கைது

சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி சுருட்டிய புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-07-12 20:59 GMT

சென்னை,

சென்னை தரமணியில் பிலிப்ஸ் ஜி.பி.எஸ். எல்.எல்.பி. என்ற தனியார் நிறுவனம் உள்ளது. அதில் மேலாளராக பணியாற்றும் ரமேஷ் சொக்கலிங்கம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்கள் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்த அகஸ்டின் சிரில் என்பவர், கம்பெனி பணம் ரூ.5 கோடியை மோசடி செய்து விட்டார். இதற்கு உடந்தையாக அவரது நண்பர் ராபின் கிறிஸ்டோபர் என்பவர் செயல்பட்டுள்ளார். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

2 பேர் கைது

குற்றம் சுமத்தப்பட்ட அகஸ்டின் சிரில், ராபின்கிறிஸ்டோபர் ஆகியோரின் சொந்த ஊரான பரமக்குடியில் உள்ள அவர்களது வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின்போது, ரூ.6 லட்சம், ஒரு கார், சுமார் 215 பவுன் தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

தலைமறைவாக இருந்த ராபின்கிறிஸ்டோபர், அகஸ்டின் சிரில் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்