தட்டிக்கேட்ட சித்தப்பாவை தாக்கிய 2 பேர் கைது
தட்டிக்கேட்ட சித்தப்பாவை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணிகண்டம்:
மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் ஹெலஸ்பன் கார்டர்(வயது 46). இவருடைய அண்ணன் மகளுக்கு திருமணமாகி, அதே பகுதியில் குடியிருக்கிறார். இவருக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் வினோத் (30) என்பவர் அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். இதுபற்றி அந்த பெண் தனது சித்தப்பா ஹெலஸ்பன் கார்டரிடம் கூறியதையடுத்து, அவர் வினோத்தை கண்டித்துள்ளார். மேலும் அங்குள்ள பெரியவர்கள் முன்னிலையில் அந்த பிரச்சினை பேசி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வினோத் மீண்டும் அந்த பெண்ணிற்கு போன் செய்து ஆபாசமாக பேசியுள்ளார். இதையறிந்த ஹெலஸ்பன் கார்டர், வினோத்தை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வினோத்தின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன்(28), ஹெலஸ்பன் கார்டரை சந்தித்து, அவரிடம் வினோத் தனியாக பேச வேண்டும் என்று கூறி அருகே யாரும் இல்லாத பகுதிக்கு கூட்டிச் சென்றுள்ளார். அங்கு சென்ற ஹெலஸ்பன் கார்டரை வினோத், தங்கபாண்டியன் மற்றும் 2 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியுள்ளனர். மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஹெலஸ்பன் கார்டரை அவரது உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து வினோத் மற்றும் தங்கபாண்டியன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தார். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.