கூட்டுறவு வங்கி ஊழியர் கொலை வழக்கில் 9 மாதங்களுக்கு பின்னர் 2 பேர் கைது

வாணாபுரம் அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் கொலை வழக்கில் 9 மாதங்களுக்கு பின்னர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-29 16:00 GMT

வங்கி ஊழியர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா எடக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 52). இவருக்கு திருமணமாகி மீனாட்சி (50) என்ற மனைவியும் விக்னேஷ் (27) ஸ்ரீதர் (16) ஆகிய 2 மகன்களும் அபிராமி (23) என்ற மகளும் உள்ளனர்.

வீராசாமி தென்கரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் முறைகேடு சம்பவத்தில் வீராசாமியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாார். இதனால் அவர் வீட்டில் இருந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி தனது விவசாய நிலத்திற்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தபோது அருகில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகில் அவரது செருப்பு மற்றும் செல்போன் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் இருந்த கிணற்றில் பார்த்தபோது ஆழமான பகுதியில் வீராசாமியின் உடல் இருந்தது. இதுகுறித்து அவர்கள் வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

வெட்டு காயம்

இதையடுத்து போலீசார் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் அவரது உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது வீராசாமியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் இருந்தது.

இதனையடுத்து போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மீனாட்சி வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்..

அதில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் குற்றவாளிகளை கண்டறிவதற்கு எந்தவிதமான தடயங்களும் கிடைக்காததால் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

தனிப்படை அமைப்பு

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தொடர்ந்து கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து செல்போன் எண்களை வைத்து போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க முடிவு செய்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (58) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் வீராசாமியின் விவசாய நிலம் இருப்பதாகவும் எங்கள் நிலத்திலிருந்து பாதை இல்லாததால் பாதை கேட்டு பலமுறை தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

கழுத்தை நெரித்து கொலை

மேலும் பாதை விடாமல் இருக்கும் வீராசாமியை கொலை செய்ய சுப்பிரமணி திட்டம் தீட்டினார்.

பின்னர் ஆண்டியார் பாளையத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி மகன் விஷ்ணு (29) மற்றும் கமல், ஜோயல் ஆகிய 3 பேரில் உதவியோடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி வீராசாமி தனது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் படுத்திருந்தபோது அவரை உருட்டு கட்டையால் பலமாக அடித்து சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்தார்.

2 பேர் கைது

இதையடுத்து சுப்பிரமணி, விஷ்ணு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கமல், ஜோயல் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று விஷ்ணு எவ்வாறு கொலை செய்தோம் என்று செய்து காட்டினார்.

குற்றவாளிகளை கண்டறிவதற்கு போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், சைபர் கிரைம் போலீசார் ஒத்துழைப்போடு குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன்களை ஆராய்ந்து குற்றவாளிகளை கண்டுபிடித்தார்.

9 மாதங்களுக்குப் பிறகு வங்கி ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்