வாலிபர் கொலையில் பெண் உள்பட மேலும் 2 பேர் கைது

நெல்லை அருகே வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்பட மேலும் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2023-10-08 20:10 GMT

வாலிபர் கொலை

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழத்திடியூர் பகுதியைச் சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24). இவர் நெல்லையில் வேளாண்மைத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 6-ந் தேதி இரவு நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான பேச்சிமுத்துவுடன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே நான்குவழிச்சாலையில் பிலாக்கொட்டைபாறை என்ற பகுதியில் வந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு கார் வந்தது. அந்த கார் திடீரென்று கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது, காரில் இருந்து திபுதிபுவென சுமார் 4 பேர் கொண்ட மர்மகும்பல் கீழே இறங்கியது. அந்த கும்பல் கார்த்திக்கை தாக்கி தங்களது காரில் கடத்திச் சென்றனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் ஏர்வாடி அருகே மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள சாலையோர முட்புதர் பகுதியில் கார்த்திக் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீசில் வாக்குமூலம்

இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை பேட்டையை சேர்ந்த சண்முகையா பாண்டியன் மகன் மாடசாமி என்ற மதன் (23), சுப்பையா பாண்டியன் மகன் தளவாய் பாண்டி (23), முருகன் மகன் கார்த்திக் (31) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைதான கார்த்திக் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். அதில், "எனது அத்தை பொன் செல்வியின் கணவர் பிச்சைராஜ், கார்த்திக் தூண்டுதலால் கொலை செய்யப்பட்டார் அதற்கு பழிக்குப்பழியாக கார்த்திக்கை கொலை செய்தோம்" என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் 2 பேர் கைது

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நெல்லை விளாகம் பகுதியை சேகர் (55), நெல்லை பேட்டை கடுங்காடு பகுதியை சேர்ந்த பிச்சைராஜ் மனைவி பொன் செல்வி (42) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்