சிறுமி இறந்த வழக்கில் மேலும் 2 பேர் கைது
சிறுமி இறந்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 53). இவரது உறவினர் மாரிமுத்து(30). இவா்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கேலி கிண்டல் செய்து மிரட்டல் விடுத்தனராம். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி கடந்த மாதம் 25-ந் தேதி பருத்தி செடிக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அந்த சிறுமியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமி, மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கை.களத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை ராமசாமியின் மனைவி ராணி(48), மகன் மணிகண்டன்(28) ஆகியோரும் சேர்ந்து துன்புறுத்தி இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்றி அமைத்து ராணி, மணிகண்டன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே ராமசாமி, மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.