ரூ.5 கோடி தங்கக்கட்டி மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

கோவையில் ரூ.5 கோடி தங்கக்கட்டி மோசடியில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-11 19:45 GMT
கோவையில் ரூ.5 கோடி தங்கக்கட்டி மோசடியில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


தங்க நகை வியாபாரி


ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விகேஷ்ஜெயின் (வயது 41). தங்க நகை வியாபாரி. இவர், கடந்த சில ஆண்டுகளாக கோவை சொக்கம்புதூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் தங்கக்கட்டிக ளை கோவையில் உள்ள நகை பட்டறைகளில் கொடுத்து நகைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறார்.


இந்த நிலையில் கோவை இடையர்பாளையத்தில் தங்கநகை பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சேக் சலாம் அலி ஜமேதார் (39) என்பவரிடம் 3 ஆண்டுகளாக தங்கக்கட்டிகளை கொடுத்து நகையாக செய்து வாங்கி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 11 கிலோ தங்கக்கட்டியை சேக் சலாம் அலி ஜமேதார் மற்றும் கடை ஊழியர் அஜய் துலா (20) ஆகியோரிடம் கொடுத்து நகைசெய்து தரும்படி கூறினார்.


போலீசார் விசாரணை


தங்க கட்டியை பெற்றுக்கொண்ட அவர்கள் 541 கிராமிற்கு மட்டுமே தங்க நகை செய்து கொடுத்தனர். மீதம் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 10.340 கிலோ தங்கக்கட்டிகளுடன் அவர்கள் 2 பேரும் தலைமறைவாகினர்.

இதனால் அதிர்ச்சி விகேஷ் ஜெயின் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார்.


அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைப்பட்டறை ஊழியர் அஜய் துலாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.


அவரிடம் இருந்து 260 கிராம் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.


அவர் அளித்த தகவலின் பேரில் தங்கக்கட்டி மோசடிக்கு கோவை இடையர்வீதியில் நகைப்பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த புரோசஞ்சித் (33), சேக் சலாம் அலி ஜமேதார் மனைவி லால்பானுபிபி (33) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.


2 பேர் கைது


உடனே போலீசார் விசாரணை நடத்தி புரோசஞ்சித், சேக் சலாம் அலி ஜமேதார் மனைவி லால்பானுபிபி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 135 கிராம் தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள சேக் சலாம் அலி ஜமேதாரை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்