பெண் போலீஸ் வீட்டில் திருடிய மேலும் 2 பேர் கைது

கடலூரில் பெண் போலீஸ் வீட்டில் திருடிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-04-25 18:45 GMT

கடலூர்

பெண் போலீஸ்

கடலூர் கோண்டூரை சேர்ந்தவர் சரவணன் மனைவி பார்வதி (வயது 41). இவர் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 24.2.2023 அன்று இரவு பார்வதி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டில் இருந்த 16 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வந்தனர். மேலும் மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் திருப்பூர் மாவட்டம் கண்டக்காம்பாளையம் ஊமைச்சிவலசு பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் சிவக்குமார் (வயது 32), குன்னத்தூர் தாளப்பதியை சேர்ந்த இம்ரான் (34) ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த மாதம் 24-ந் தேதி சிவக்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 பவுன் நகையை மீட்டனர். தொடர்ந்து இம்ரானை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் மற்றொரு திருட்டு வழக்கில் கைதாகி தாராபுரம் கிளை சிறையில் இருப்பது தெரிந்தது.

அடையாளம் காட்டியதற்கு பங்கு

இதையடுத்து கடலூர் போலீசார் இம்ரானை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர், கடலூர் பெரியகங்கணாங்குப்பத்தை சேர்ந்த தனது நண்பர் ராஜேஷ் (32) என்பவருடன் மது அருந்தும் போது, அவர் திருடுவதற்காக பூட்டி கிடக்கும் வீட்டை அடையாளம் காட்டுவதாகவும், அதற்கு பதிலாக தனக்கு பங்கு தர வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி ராஜேஷ், பெண் போலீஸ் பார்வதியின் வீட்டை அடையாளம் காட்டியதும், அங்கு இம்ரான், சிவக்குமாருடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்ததும், அதற்கு ஈடாக ராஜேசுக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து இம்ரானை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ராஜேசை தேடி வந்தனர். இதற்கிடையே புதுச்சேரி மாநிலம் முள்ளோடை பகுதியில் பதுங்கி இருந்த ராஜேசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து 3 பவுன் நகை மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்